×

திருவெண்ணெய்நல்லூர் அருகே நள்ளிரவில் மர்ம நபர்கள் கொட்டி செல்லும் மருத்துவ கழிவுகளால் நோய் பரவும் அபாயம்

திருவெண்ணெய்நல்லூர்:  திருவெண்ணெய்நல்லூர் அருகே மர்மநபர்கள் நள்ளிரவில் கொட்டி செல்லும் மருத்துவ கழிவுகளால் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. திருவெண்ணெய்நல்லூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளான சரவணம்பாக்கம், துலுக்கப்பாளையம் உள்ளிட்ட பகுதிகள் கடலூர் - சித்தூர்  சாலையில் அமைந்துள்ளது. இந்த கிராமங்களில் ஆள் நடமாட்டம் இல்லாத இடங்களில் நள்ளிரவு நேரங்களில் மூட்டை, மூட்டையாக மருத்துவ கழிவுகளை மர்ம நபர்கள் வாகனங்களில் ஏற்றி வந்து இப்பகுதியில் சாலையோரம் விட்டு கொட்டி செல்கின்றனர்.

இதுபற்றி தகவல் அறிந்த சுகாதாரத்துறை பணியாளர்கள் விரைந்து சென்று அந்த கழிவுகளை அப்புறப்படுத்தி பள்ளம் தோண்டி புதைத்து வந்தனர். இருந்தும் மர்ம நபர்கள் தொடர்ந்து இதேபோன்று இப்பகுதியில் டன் கணக்கில் கழிவு மூட்டைகளை கொட்டி விட்டு செல்கின்றனர். இதன்மூலம் பொதுமக்களுக்கு தொற்று நோய்கள் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதுபற்றி சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் திருவெண்ணெய்நல்லூர் போலீசில் மர்ம நபர்கள் மீது புகார் கொடுத்துள்ளனர். நள்ளிரவு நேரங்களில் மருத்துவக்கழிவுகளை கொட்டி செல்லும் மர்ம நபர்களை விரைந்து கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags : Thiruvennainallur , Thiruvennayanallur, Medical Waste
× RELATED திருவெண்ணெய்நல்லூர் அருகே தென்பெண்ணை...